டில்லி:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக இணையதளத்தில் அமெரிக்கா மற்றும் கனடா சாலைகளை அமைச்சகம் பயன்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் 5.4 மில்லியன் கிலோமீட்டர் சாலைகள் உள்ளது. ஆனால், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கு தங்களது இணையதளத்தில் பயன்படுத்த இதில் ஒரு புகைப்படம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்பெயின்மொரோக்கோ எல்லை சாலை புகைப்படம் இந்த அமைச்சகத்தின் பிரதான இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் கனடா தொரந்தோ-கார்டினர் எக்ஸ்பிரஸ் சாலையின் புகைப்படமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசின் ஒரு அமைச்சகத்தில் கனடா நாட்டு சாலை இடம்பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படங்கள் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. இந்த சாலை புகைப்படத்தின் பின்னணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனால் இதை எளிதில் அடையாளம் காண முடியவில்லை. எனினும் ஆல்ட் நியூஸ் என்ற நிறுவனம் இது கனடா எக்ஸ்பிரஸ் சாலை என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

கனடா சாலை மட்டுமல்ல இதர நாட்டு சாலைகளின் புகைப்படங்களையும் இந்த அமைச்சக இணைய தளத்தில் காண முடிகிறது. அமெரிக்காவில் நெவடாவில் உள்ள கையிலே கேன்யான் சாலையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் 2011ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி எடுக்கப்பட்டது. நிகோலா என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்து தனது பிளிக்கர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்த இணையதளம் ‘என்ஐசி’ சார்பில் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இணையதள முதன்மை கட்டுமான நிறுவனம் என்று பெருமை பேசும் என்ஐசி வெளிநாடுகளின் புகைப்படங்களை பயன்படுத்திருப்பது பெரும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.