டில்லி

ர் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை விற்கக் கூடாது என வலியுறுத்தி நிறுவன தலைவரை தொழிற்சங்கங்கள் சந்திக்க உள்ளன.

அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்று வரை சுமார் 55,000 கோடி கடன் உள்ளது. இதை இதுவரை செலுத்த இயலவில்லை. மேலும் நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதை தடுக்க பல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடன் சுமையை குறைக்க ஏர் இந்தியா தனது பங்குகளை வெளியாருக்கு விற்க அரசு அனுமதி அளித்தது. அதை ஒட்டி டெண்டர் விடப்பட்டது.

ஏர் இந்தியா எதிர்பார்த்த விலை கிடைக்காததால் பங்குகள் விற்பனை ரத்து செய்யபட்டுள்ளது. இந்த வருட நிதிநிலை அறிக்கையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க மீண்டும் முயற்சிகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தில் தற்போதுள்ள நிலையில் ஊழியர்களுக்கு வரும் அக்டோபர் வரை ஊதியம் அளிக்க மட்டுமே நிதி வசதி உள்ளது. வருடத்துக்கு ஏர் இந்தியா ரூ2400 கோடி ஊதியம் வழங்கி வருகிறது.

ஏர் இந்தியாவில் மொத்தம் 13 தொழிற்சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்கள் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்க வேண்டாமென வலியுறுத்த வேண்டி நிறுவன தலைவரை சந்திக்க உள்ளனர். மூத்த அதிகாரி ஒருவர், ”தற்போதுள்ள நிலையில் இந்திய ஏர்லைன்ஸ் தனது பங்குகளை விறனை செய்யாவிடில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கும். இதனால் இந்த வருடம் செலுத்த வேண்டிய கடன் பாக்கி ரூ. 10000 கோடி செலுத்த முடியாத நிலை உண்டாகும்.

இவ்வாறு நடந்தால் ஏர் இந்தியா தனது சேவைகளை ஜெட் ஏர்வேஸ் போல குறைக்க அல்லது நிறுத்த நேரிடும். ஏற்கனவே ஜெட் ஏர்லைன்ஸ் சேவைகளை நிறுத்திக் கொண்டதால் நாட்டில் விமான சேவை நிறுவன பற்றாக்குறை உள்ளது. ஏர் இந்தியாவுக்கும் அந்நிலை வந்தால் முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே புகுந்து விட நேரிடும். “ என தெரிவித்துள்ளார்.