டெல்லி:

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 0.10 சதவிகிதம்  அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund) என்பது தொழிலாளர் களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த சம்பளத்தில் தொழில்தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது இந்த வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை கூட்டியிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார்  தெரிவித்து உள்ளார்,

“வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் கூட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டது. அதன்படி, 2018- 2019 ஆம் நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ள 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பலன் அடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.55 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வகிதம் 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக இன்று உயர்த்தியுள்ளது.