கன்சாஸ்:

அமெரிக்காவின் ஒரிகன் நாட்டில் இருந்து மிசோரி நாட்டின் கன்சாஸ் நகருக்கு காரா ஸ்விண்டில் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன் தினம் பயணம் செய்தார். இவர்கள் குடும்பத்தையே கன்சாஸ் நகருக்கு இடமாற்றம் செய்யும் திட்டத்ததோடு இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

அதற்கு ஏற்ப ஸ்விண்டில் என்பவர் தனது செல்லப் பிராணியான ‘இர்கோ’ என்ற 10 வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாயையும் விமானத்தின் கார்கோ பிரிவில் புக்கிங் செய்திருந்தனர். கன்சாஸ் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் ஸ்விண்டில் குடும்பத்தினர் நாயை டெலிவரி எ டுப்பதற்காக கார்கோ பிரிவுக்கு சென்றனர்.

ஆனால், அங்கு இர்கோ இல்லை. அதற்கு பதிலாக ‘கிரேட் டேன்’ வகை நாயை கார்கோ ஊழியர்கள் ஸ்விண்டில் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். விசாரித்ததில், தவறுதலாக இர்கோவை ஜப்பான் விமானத்தில் ஊழியர்கள் அனுப்பிவைத்துவிட்டது தெரியவ ந்தது. ஜப்பான் செல்ல வேண்டிய கிரேட் டேன் நாய் கன்சாஸ் நகருக்கு வந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து விமான நிறுவனத்திடம் புகார் செய்யப்பட்டது. தவறு நடந்திருப்பதை விமான நிறுவனம் ஒப்புக் கொண்டது.

இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘தவறுதலாக இரு வளர்ப்பு பிராணிகள் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது செல்லப் பிராணிகள் பத்திரமாக விரைவில் ஒப்படைக்கப்படும். கால்நடை மருத்துவர் பரிசோதனைக்கு பின்னர் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட இடத்தில் தவறு நடந்துள்ளது. இதற்காக மன்னிப்பு கோரப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இர்கோ திரும்ப கிடைக்க 2 வாரங்கள் கால தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டதால், இர்கோ தனிமையில் இருப்பதை எண்ணி ஸ்விண்டில் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.