வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முதற்கட்ட நடவடிக்கையாக ஐநா சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து இருக்கிறது அமெரிக்கா.
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அண்மையில் அதற்கு  அமெரிக்கா வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்துவதாக அவர் அறிவித்தார்.
மேலும், கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார அமைப்பின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக்கப் போவதாக ஏப்ரலில் ட்ரம்ப் அறிவித்தார். இந் நிலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அறிவிக்கை கடிதத்தை ஐநா  சபையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது. இதனை ஐநா உறுதிப்படுத்தி உள்ளது.
ஐநா பொதுச்செயலாளருக்கான செய்தித்தொடர்பாளர் ஸ்டானே துஜாரிக் கூறி இருப்பதாவது: உலக சுகாதார அமைப்பிலிருந்து அடுத்த ஓராண்டில் வெளியேறுகிறோம் என்ற கடிதத்தை அமெரிக்கா ஜூலை 6, 2020ல் வழங்கியுள்ளது. இந்தக் கடிதம் அளிக்கப்பட்டு ஓர் ஆண்டில், அதாவது 2021ம் ஆண்டு ஜூலை 6 முதல் அமெரிக்காவின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும் என்றார்.