கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவின் வெளியில் தெரியாத அந்த சாதனை..!

--

இந்திய முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனை ஒன்று, அதிகம் வெளியில் தெரியாத அதேநேரத்தில், இன்னும் முறியடிக்கப்படாமல் சுற்றிக்கொண்டுள்ளது. அது இதற்கு மேலும் முறியடிக்கப்படுமா? என்பதும் பெரிய சந்தேகமே!

இந்தியா இதுவரை கண்ட கிரிக்கெட் ஆல்ரவுண்டர்களில் மிகச் சிறந்தவர் கபில்தேவ். அவருக்கு இணையான ஒரு ஆல்ரவுண்டர் இதுவரை இந்தியாவிற்கு கிடைத்ததில்லை. அதனோடு அவர், மிகச்சிறந்த கேப்டனும்கூட.

இந்தியாவிற்கு முதன்முதலாக யாரும் எதிர்பாராத வகையில் உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர், 434 விக்கெட்டுகளை வீழ்த்தி ரச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்தவர், உலகக்கோப்பையில் முதன்முதலாக 175 என்ற அதிகபட்ச தனிநபர் ரன்களை அடித்தவர், சிறந்த ஃபீல்டர் என்பது உள்ளிட்ட அவரின் பல பெருமைகள் நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவர் செய்திருக்கும் ஒரு சாதனை மிக அபூர்வமானது. அவர் மொத்தமாக 131 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளார். அதில் 270 முறை பிற வீரர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதில், அவர் ஒருமுறை கூட ரன்அவுட் ஆனதில்லை என்பதுதான் அந்த சாதனையே!

100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர்களில், ஒருமுறைகூட ரன் அவுட் ஆகாமல் இருந்தது கபில்தேவ் மட்டுமே. மேலும், இவரின் எதிர்முனையில் இவருடன் ஆடிய பேட்ஸ்மென்களும் வெறும் இரண்டு முறை மட்டுமே ரன் அவுட் ஆகியுள்ளனர்.

இந்த சாதனையை, வருங்காலத்தில் வேறு எவரேனும் முறியடிப்பார்களா? என்பதே பெரும் சந்தேகமே..!