கந்த சஷ்டி விழா : பல  புதிய செய்திகள்

இன்று கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை ஒட்டி சூர சம்ஹாரம் கொண்டாடப்படுகிறது.   மற்ற எல்லா அசுரர்களையும் விட சூர பத்மனுக்கு தனிப் பெருமை உள்ளது.  மற்ற அசுரர்கள் கடவுளால் அழிக்கப்பட்டவர்கள்.  அதாவது வதம் செய்யப்பட்டவர்கள்.  ஆனால் சூர பத்மன் அழிக்கப்படவில்லை.  அவன் சேவலாக முருகப் பெருமானின் கொடியிலும், மயிலாக முருகனின் வாகனமாகவும் இன்றும் பூஜிக்கப்படுகிறான்.    அதாவது சூர பத்மனின் பாவங்களை சுத்திகரித்து தன்னுடன் ஏற்றுக் கொண்டார் முருகப் பெருமான்.

எந்த ஒரு அசுரனுக்கும் கிடைக்காத பாக்கியம் சூர பத்மனுக்கு கிடைத்துள்ளது.   முருகனுக்கு அர்ச்சிக்கும் மலர்கள் அவருடைய பாதத்தில் மட்டும் அல்ல, பாதத்தில் உள்ள மயிலின் மீதும் விழும்.   ஆம்.  அசுரனை சுத்திகரித்து பூஜைக்குரியவனாக்கி உள்ளார் முருகப் பெருமான்.

கந்த புராணக் கதைகள் சிலவற்றிலும் மகாபாரதக் கதைகள் சிலவற்றிலும் கந்த சஷ்டி பற்றி வேறு இரு வரலாறுகளும் காணப்படுகின்றன.  மகாபாரதக் கதையின்படி, முனிவர்கள் உலக நன்மைக்காக யாகம் ஒன்றை நடத்தி சிவபுத்திரன் அவதரிக்க வேண்டிக் கொண்டனர்.  அந்த யாகத்தை ஐப்பசி மாதம் அமாவாசை அன்று துவங்கினர்.  ஆறு நாட்கள் நடந்த அந்த யாகத்தின் போது அக்னியில் இருந்து ஒவ்வொரு நாட்களும் ஒரு வித்து வெளியே வந்தது.  ஆறாம் நாளன்று அந்த ஆறு வித்துக்களும் ஒன்றாகி முருகன் அவதரித்தார்.  அப்படி முருகனின் அவதார நாள் தான் இந்த கந்த சஷ்டி ஆகும்.

கந்த புராணத்தின்படி தேவர்கள் அசுரர்களை வெல்லும் அளவுக்கு வல்லமை பெற சிவாச்சாரியார்கள் நோன்பு இருந்துள்ளனர். ஐப்பசி மாத அமாவாசையில் ஒரு கும்பம் அமைத்து அதில் முருகனை எழுந்தருளச் செய்தனர்.  பிறகு ஆறு நாட்கள் நோன்பு இருந்தனர்.  அந்த நோன்பின் முடிவில் முருகன் தோன்றி அவர்களுக்கு வரம் அளித்தார்.  அதனால் கந்த சஷ்டி கொண்டாடப்படுவதாக ஒரு வரலாறு கூறுகிறது.

நாளை ஏழாம் நாள் அன்று முருகன் தெய்வானை கல்யாண உற்சவ தினமாகும்.  இந்த விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் விசேஷமாக நடை பெறும்.   சூரனை வென்று ஆட்கொண்டமைக்காக தேவேந்திரன் தனது மகள் தேவயானையை திருமணம் செய்துக் கொடுத்ததாக புராண வரலாறு தெரிவிக்கின்றது.