முசிறி அருகே ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை: காவல்துறை விசாரணை

முசிறி அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆண்டி. ரெயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 31ம் தேதி தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவருடைய வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம், பக்கத்தினர் சென்னையில் இருந்த ஆண்டிக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டி முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் உடனடியாக ஆண்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. இந்நிலையில் முசிறிக்கு திரும்பிய ஆண்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது 7 பவுன் நகைகளும், ரூ. 15 ஆயிரமும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆண்டி, முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பானுமதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி