டெல்லி: லாக்டவுன் தளர்வுகளை தொடர்ந்து விருந்தினர்களை இலவச உணவு, தள்ளுபடிகளுடன் வரவேற்க நட்சத்திர ஓட்டல்கள் தயாராகின்றன.

கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக ஓட்டல்கள் இயங்கவே இல்லை. தற்போது லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டல்கள் சில விதிமுறைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் பல வழிகாட்டுதல்களையும், கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. அதன்படி 3 மாக காலத்துக்கு பிறகு வாடிக்கையாளர்களை வரவேற்க தயாராகிறது நட்சத்திர ஓட்டல்கள். அதற்காக கவர்ச்சிகரமான சலுகைகளும் வழங்க உள்ளன.

இலவச காலை உணவு, தள்ளுபடி செய்யப்பட்ட தங்குமிடங்கள், இலவச வைபை மற்றும் சலவை, குறித்த நேரத்துக்கு முன்பாகவே அறையை புக் செய்து கொண்டு தாமதமாக வெளியேறுதல் ஆகியவை ஓட்டல் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான சலுகைகள் ஆகும்.

பிரீமியம் மற்றும் ஆடம்பர வகுப்பு சங்கிலிகளான தாஜ் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ், ஐடிசி ஹோட்டல், ஹோட்டல் லீலா, மேரியட் இன்டர்நேஷனல் ஆகியவை இந்த சலுகைகளை வெளியிட்டுள்ளன. ஐடிசி ஓட்டல்களில் இப்போது முன்பதிவு செய்து, பின்னர் பணத்தை செலுத்தலாம் என்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பேருக்கு இலவச காலை உணவு, இலவச வைபை பயன்பாடு, சலவை, ரத்து செய்தால் முழு கட்டணம் திரும்ப பெறும் வசதி என சலுகைகள் வழங்குவதாக ஓட்டல் நிர்வாகங்கள் கூறி உள்ளன. இந்த சலுகைகளுடன் ஐ.டி.சியானது ஒரு இரவுக்கு ரூ .5,999 என்று தொகையை நிர்ணயித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த லீலா பேலஸ் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ், கோவாவில் 3 இரவு தங்கினால் 4வது இரவை இலவசமாக வழங்குகிறது. டாடா குழுமம் நடத்தும் தாஜ் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் கேரளாவில் குறைந்தபட்சம் மூன்று இரவுகளில் தங்குவதற்கான ஒரு தொகுப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

வரிகளை தவிர்த்து, பபே காலை உணவு, முழுமையான மதிய உணவு, குளிர்பானங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி, வேம்பநாடு ஏரி வழியாக ஒரு மணி நேர படகு பயணம், நிறுவனம் இந்த தொகுப்பின் விலை ரூ .22,500 என்று நிர்ணயித்துள்ளது.

சர்வதேச ஓட்டல் நிறுவனங்களும் இந்த போட்டியில் குதித்துள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல் மேரியட், தனது அறைகளை ஜூன் 30 க்கு முன்னர் செய்த அனைத்து முன்பதிவுகளுக்கும், குறைந்தபட்சம் 30 சதவிகிதம் தள்ளுபடி செய்து 2021 ஜூன் 30 வரை தங்கியிருக்க அனுமதிக்கிறது.

விருந்தினர்கள் இரண்டு அல்லது மூன்று இரவுகள் தங்குவதற்குத் தேர்வு செய்யலாம், ஆனால் ஒன்று அல்லது இரண்டுக்கு மட்டுமே செலுத்தினால் போதும். இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் இலங்கை முழுவதும் 90 க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இந்த சலுகைகளை வழங்குகின்றன.