சிறுநீரக தானம் : தந்தையின் உயிரைக் காத்த மகள்

கமதாபாத்

திருமணம் ஆகாத மகள் தனது தந்தைக்கு சிறுநீரக தானம் செய்துள்ளார்.

நேற்று தந்தையர் தினம் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அதை ஒட்டி சமூக வலைத் தளங்களில் தங்களின் தந்தையார் புகைப்படத்தை பதிந்து அவரைப் பற்றி பதிவிட்டு பலரும் மகிழ்ந்தனர்.  அதே நேரத்தில் ஒரு சிலர் தந்தைக்காக  அவர் படத்தை பதிவதும்,   அவரைப் பற்றிய செய்திகள் பதிவதும் உண்மையான தந்தையர் தின கொண்டாட்டம் அல்ல என பதிந்தனர்.

அகமதாபாத் நகரில் ஒரு 24 வயது மணமாகாத பெண் தந்தையர் தினத்துக்கு இரு தினங்கள் முன்பு தந்தையாருக்கு உண்மையான பரிசை அளித்துள்ளார்.  அகமதாபாத்தை சேர்ந்த 49 வயதான மோகன்லால் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.   அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதை ஒட்டி சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணர் ஹிமன்சு ஷா மற்றும் சரத் சிசோதியா இருவரும் குடும்ப உறுப்பினர்களை பரிசோதனை செய்தனர்.   மோகன்லாலின் 24 வயதான மணமாகாத மகள் ஹீனா மற்றும் மகன் ஆகியோர் சோதனை செய்யப்பட்டனர்.    மகனுடைய சிறுநீரகம் ஒத்துப் போகாததால் மகள் சிறுநீரகம் தானம் செய்ய முன் வந்தார்.

ஆனால் அவர் மணமாகதவர் என்பதால் மருத்துவர்கள் அவர் தானத்தை ஏற்க முன் வரவில்லை.   அவருடைய திருமணம் இந்த சிறுநீரக தானத்தால் தடங்கலுக்கு உள்ளாகும் என அனைவரும் அஞ்சினர்.   ஆயினும் ஹீனா பிடிவாதமாக தனது தந்தைக்கு சிறுநீரக தானம் செய்து அவர் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்து தற்போது தந்தை மற்றும் மகள் ஆரோக்யமாக உள்ளனர்.   இந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் “இது வரை நாங்கள் பல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.   28 பெண்கள் தானம் செய்துள்ளனர்.   அவர்களில் 14 பேர் தங்களின் தந்தைக்கு தானம் செய்துள்ளனர்.  அவர்களில் ஹீனா மட்டுமே திருமணம் ஆகாதவர்” என தெரிவித்துள்ளனர்.