க்னோ

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த உன்னாவ் பெண்ணின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக ஒரு 17 வயதுப் பெண் புகார் அளித்தார். அந்தப் பெண்ணின் தந்தை செங்காரின் ஆட்களால் தாக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணம் அடைந்தார். இதற்கு நீதி கோரி அந்த பெண் உ பி மாநில முதல்வர் இல்லத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற பிறகு அவர் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு செங்கார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உறவினரைக் காண ரேபரேலிக்கு தனது வழக்கறிஞர் மற்றும் உறவினர்களுடன் சென்ற அந்தப் பெண்ணின் கார் மீது ஒரு லாரி பயங்கரமாக மோதியது. பெண்ணின் உறவினர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஆபத்தான நிலையில் அந்தப் பெண்ணும்  வழக்கறிஞரும் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தலையில் அடிபட்ட வழக்கறிஞருக்கு உடல்நிலை தேறி உள்ளது.

அவர் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை எனக் கூறப்பட்டாலும் தற்போது சுவாச உபகரணங்கள் இன்றி தாமாகவே சுவாசித்து வருகின்றார். ஆனால் புகார் அளித்த பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு இன்னும் செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு அதன் மூலம் சுவாசித்துக் கொண்டுள்ளார்.