உன்னாவ் பாலியல் விவகாரம்: யோகி அரசு மீது சாட்டையை சுழற்றிய உச்சநீதி மன்றம்

டில்லி:

ன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உ.பி. மாநிலத்தில் இருந்து டில்லி நீதி மன்றத்துக்கு மாற்ற உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் விபத்து தொடர்பான வழக்கை 7 நாட்களுக்குள் முடிக்கவும் சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உன்னாவ் பாலியல் தொடர்பான வழக்கு விவகாரத்தில் உச்சநீதி மன்றம் மாநில யோகி அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றி உள்ளது, பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. யோகி தலைமையிலான பாஜக மாநில அரசுக்கு விழுந்த சம்மட்டி என்று வர்ணிக்கப்படுகிறது.

உன்னாவ் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாஜகவை சட்டமன்ற உறுப்பினர் செங்கார் உள்பட பலர் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார்மீது கடந்த வாரம் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய நிலையில்,  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே கடந்த மாதம் 12ந்தேதி தலைமைநீதிபதிக்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.

இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் கேள்வி எழுப்பிய தலைமைநீதிபதி, இன்று விசாரணை நடத்தப்படும் என்று நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, உன்னாவ் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரியை மதியம் 12 மணிக்குள் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.  அப்போது சிபிஐக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

விபத்து தொடர்பான  வழக்கு விசாரணையை அடுத்த 7 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு அதிரடி உத்தரவிட்டார். விதிவிலக்காக, சிபிஐக்கு இன்னும் ஒரு வாரம் ஆகலாம், ஆனால் எந்த சூழ்நிலையிலும் விசாரணை பதினைந்து நாட்களுக்கு அப்பால் நீடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

உன்னாவ் பாலியல் வன்புணர்வு சம்பவம், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் தொடர்பான வழக்கு, தற்போது நடைபெற்ற விபத்து, செங்கார் மீதான வழக்கு உள்பட  அனைத்து 5 வழக்குகளையும் டில்லி நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

விபத்தில் படுகாயம் அடைந்த  பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோரை , டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும், அவர்கள் குடும்பத்தினர் விரும்பினால்  விமானம் மூலம் மாற்றவும் உத்தரவிட்டார்.

பாலியல் தொடர்பான வழக்கை தினசரி நடத்தி 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் .

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உ.பி.மாநில அரசு  ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதை நாளைக்குள் வழங்க வேண்டும் என்றும் ‘உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் உள்பட அவர்களது குடும்பத்தினருக்கு  மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா தொடர்ந்த வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கை அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

உச்சநீதி மன்றம் இன்று சுழற்றியுள்ள சாட்டை, யோகி அரசுக்கு விழுந்த அடி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி