பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உலகில் உணவுப் பஞ்சம் தலைதூக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.

எனவே, பேரழிவைத் தடுக்க, உலக நாடுகளின் அரசுகள் ஒருங்கிணைந்து விரைவாக செயல்பட வேண்டுமென்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு சுமார் 50 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், நீண்டகால விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். ஏனெனில் குழந்தை பருவத்தில் கிடைக்காத தேவையான ஊட்டச்சத்து வாழ்நாள் முழுவதும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே, உலகெங்கிலும் உள்ள ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை, தனது ஐந்து வயதிற்குள் அதன் வளர்ச்சியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும், வறுமை விகிதங்கள் உயர்ந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் இதே கதியைத்தான் சந்திக்க நேரிடும்.

அதிகளவு உணவு உற்பத்தி செய்யப்படும் நாடுகளில்கூட, உணவு வினியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான அபாயம் இருக்கிறது. இதனைத் தவிர்க்க மூன்று அம்ச திட்டம் முக்கியமானது.

உடனடிப் பேரழிவைத் தடுக்க, கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துதல், அரசாங்கங்கள் உணவு வினியோக சங்கிலிகளுக்கு முன்னுரிமை அளித்தல், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் ஊரடங்கால் பள்ளிகளில் உணவு கிடைக்காத குழந்தைகள் உள்ளிட்ட பிற ஆபத்தான பிரிவினருக்கு சமூக பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, போதுமான ஊட்டச்சத்தைப் பெறுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளிக்கும் உணவு அமைப்பில், எதிர்காலத்தின் பொருட்டு முதலீடு செய்ய வேண்டும் என்ற கூறப்பட்டுள்ளது.