எடியூரப்பா மாற்றமா? 4 பக்க கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவர் முதல்வர்  பதவியில் இருந்து விலகக்கோரி 4 பக்கங்கள் கொண்ட கையொப்பமிடாத கடிதம் ஒன்று வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுத்து,  குமாரசாமியிடம் இருந்து ஆட்சியை பறித்தவர் எடியூரப்பா. இதன் காரணமாக, எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சி எம்.எல்ஏக்கள் தகுதி இழந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக  வெற்றி பெற்று, அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளனர்.

மாற்று கட்சியில் இருந்து, பாஜகவுக்கு தாவியர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட விவகாரம் பாஜக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பாவின் வயதையும், உடல்நலம் குறித்த பிரச்சினைகளையும்  காரணம் காட்டி ஒரு கடிதம் வந்துள்ளது.  4 பக்க அளவிலான அந்த கடிதத்தில் யாருடைய பெயரும் பதிவிடாமல், எடியூரப்பாவின் நலம்விரும்பிகள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில், எடியூரப்பா  “பலவீனமானவர், உதவியற்றவர், செயலற்றவர்”  ஆக மாறி விட்டார்  என்பதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று “மார்கதர்ஷக்” ஆக மாறினால் நல்லது. மாநிலத்தின் முதல்வர்  பதவியில் இருந்து அவர் விலக வேண்டும், அவரை ஆளுநராக்குவதன் மூலம் கட்சி, அவரது அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், முதலமைச்சர் தன்னைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டி உள்ளதாகவும், நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், குறிப்பாக அவரது மகன் பிஎஸ்.வீரேந்திரா அரசு நிர்வாகங்ளில் அதிக அளவில் தலையிடுவதாகவும்  குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன், அவரது சமூகமான லிங்காயத்-வீரஷைவ சமூகத்தில் யாரையும் வளர முதலமைச்சர் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

விரைவில் தனது 77வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட முதல்வர் எடியூரப்பா, திட்டமிட்டுள்ள நிலையில், இந்த கடிதம் வந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு எடியூரப்பபா விசுவாசிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில்  பாஜக பெற்ற வெற்றியில் தெளிவாகத் தெரிந்ததைப் போலவே, மாநிலத்தில் பாஜகவின் ஒரே வெகுஜனத் தலைவராக எடியூரப்பா இருக்கிறார்” என்றும், எடியூரப்பாவுக்கு  ” மத்திய பாஜக தலைமையின் முழு ஆசீர்வாதம்” இருப்பதாகவும் கூறி உள்ளனர்.