ஆப்கனில் நவம்பர் 21ம் தேதி வரை போர் நிறுத்தம்…அதிபர் அறிவிப்பு

காபுல்:

ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் ரம்ஜான் முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட போர்நிறுத்ததை தலிபான்கள் மீறியதால் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசுப்படைகள் தீவிரப்படுத்தின.

நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (20ம் தேதி முதல் மீலாது நபி விழா கொண்டாடப்படும் நவம்பர் 21-ம் தேதி வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நேட்டோ படை இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன