காஷ்மீர் நிலை மாறும் வரை  இந்தியாவுடன் பேச்சு வார்த்தை இல்லை : அமெரிக்காவில் இம்ரான்கான்

வாஷிங்டன்

காஷ்மீர் நிலை மாறும் வரை இந்தியாவுடன் பேச்சு வார்த்தை இல்லை என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த  ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது.   அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.  இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   முன்னாள் முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்தக் கட்டுப்பாடுகள் காஷ்மீர் மக்களுடைய விருப்பத்துக்கு எதிரானது எனப் பாகிஸ்தான் கடும்  எதிர்ப்பு தெரிவித்தது.  இது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட பல அமைப்புகளிடம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் புகார் அளித்தது.   ஆயினும் இது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஆன பிரச்சினை எனக் கூறி இந்த அமைப்புக்கள் இதில் தலையிட மறுப்பு தெரிவித்தன.

இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார்.  அப்போது அவர், ”காஷ்மீரில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டு மனித உரிமை மீறல் நடைபெற்று வருகிறது.   காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை இந்தியாவுடன் இணைத்துள்ளனர்.

இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க இயலாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   நான் இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்பு மிகவும் ஆதரவு தெரிவித்து வந்தேன்.   ஆனால் தற்போது காஷ்மீரில் உள்ள நிலை சீரடையும் வரை இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெறாது.” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி