ஜிஎஸ்டி வரி விதிப்பில் மோடி ‘பல்டி’ அடித்தது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

டில்லி:

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் மீறி சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்திய பிரதமர் மோடி அரசு , தற்போது வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைத்து வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ள மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்   ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மோடி அரசு பல்டி அடித்தது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளதார்.

ஜிஎஸ்டி குறித்து நாங்கள் ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கள், முட்டாள்தனமாகவும் அசட்டுதனமாகவும் இருப்பதாக தெரிவித்த மோடி அரசு, தற்போது, அவைகள்  எப்படி மத்திய அரசின் இலக்காக மாறியது? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டது.  ஒருசில  சொகுசு, ஆடம்பரம் பொருட்கள் மட்டுமே 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ளதாகவும், மற்ற அனைத்துப் பொருட்களும் 18 சதவீத வரி வரம்புக்குள் மாற்றி விட்டதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், “ஜிஎஸ்டி வரம்பை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்துக்குள் கொண்டு வருமாறு நாங்கள் ஏற்கனவே கோரிக்கை முன்வைத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அந்தக் கோரிக்கையை முட்டாள்தனமானது என கருதியது மத்திய அரசு. தற்போது காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை இலக்காக நிர்ணயித்துள்ளது  மத்திய அரசு.

‘மேலும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் முன்வைத்த 15 சதவீத நிலையான ஜிஎஸ்டி என்ற யோசனையை மத்திய அரசு முதலில் அசட்டை செய்தது. தற்போது அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

நேற்று முட்டாள்தனமாகவும் அசட்டுதனமாகவும் தெரிந்த ஒரு விசயம், தற்போது மத்திய அரசின் இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.