புதுப்பிக்கப்படாத சர்வே எண்கள் – ஆபத்தில் கோயில் நிலங்கள்

சென்னை: தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை, சென்னை மாநகரிலுள்ள கோயில் சொத்துக்கள் குறித்த சர்வே எண்களைப் புதுப்பிக்காமல் வைத்துள்ளதால், அந்த நிலங்கள் ஆக்ரமிப்பாளர்களின் கரங்களுக்குள் எளிதாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; தமிழகமெங்கும் பரவியுள்ள கோயில் சொத்துக்களை பாதுகாப்பது மாநில அரசின் இந்து அறநிலையத் துறையின் பொறுப்பு. அதனிடம்தான், கோயில் நிலங்களுடைய சர்வே எண்கள் இருக்கும்.

ஆனால், கடந்த காலங்களில் அந்த சர்வே எண்கள் இந்து அறநிலையத் துறையால் புதுப்பிக்கப்படவில்லை. இதனால், பத்திரப்பதிவு துறையில் பழைய சர்வே எண்களே புழக்கத்தில் உள்ளன. இதனால், ரியல் எஸ்டேட் துறையினர் உள்ளிட்ட பல நில ஆக்ரமிப்பு முதலைகளின் கைகளுக்குள் கோயில் நிலங்கள் சென்றுவிடும் அபாயம் நிலவுகிறது.

பழைய சர்வே எண்களே பதிவுத்துறையின் கைவசம் இருப்பதால், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயார்செய்து, கோயில் நிலங்களுக்கு பட்டா வாங்கி விடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த முக்கியமான விஷயத்தில் இந்து அறநிலையத்துறை எதற்காக இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.