லக்னோ:

உத்திர பிரதேச மாநிலத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடைந்தது.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக, முலாயம்சிங் பதவி வகிக்கிறார். அவரது மகன் அகிலேஷ்யாதவ் முதலவராக இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக அகிலேசுக்கும், அவரது சித்தப்பா சிவ பால் சிங்குக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது. சிவபால்சிங்கை, முலாயம் ஆதரிக்கிறார்.

சிவபால் சிங்கின் இன்னொரு சகோதரர் ராம் கோபால் யாதவ் அகிலேசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இதனால் இரு தரப்பினருக்கும் எப்போதும் முட்டல் மோதல்தான்.

இந்த நிலையில், மகன் மற்றும் தம்பியின் நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்த முலாயம் சிங், இரு நாட்களுக்கு முன்பு அகிலேஷ் யாதவையும், ராம்கோபால் யாதவையும் 6 வருடங்களுக்கு கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

தந்தை–மகன் இடையே ஏற்பட்ட மோதலை மூத்த அமைச்சர் ஆசம்கான் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில் அதிரடி திருப்பமாக  பெரும்பான்மையான தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை நிரூபிக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சியின்  தேசிய செயற்குழுவை கூட்டத்தை அகிலேஷ் யாதவும், ராம்கோபால் யாதவும் இணைந்து நேற்று லக்னோவில் கூட்டினார்கள்.

இந்த கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அவரது மகன் அகிலேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங்கும்,இன்னொரு தலைவர் அமர்சிங்கும் நீக்கப்பட்டனர்.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைமை எடுத்த முடிவு குறித்து தேர்தல் கமி‌ஷனை அணுகி தெரிவிக்கப்பபோவதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலேஷ் யாதவ்  கூறினார்.

ஆனால் இந்த செயற்குழு சட்டவிரோதமானது என்றும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் செல்லாது என்றும் முலாயம் சிங் அறிவித்துள்ளார். .

ஆக, வெளிப்படையாகவே சமாஜ்வாடி கட்சி, இரண்டாக பிளவுபட்டுவிட்டது.