லக்னோ:

ஏடிஎம்.ல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி புகைப்படங்கள் இல்லாதது கண்டு மக்களை அதிர்ச்சியடைந்தனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு திரும்ப பெற்றது. புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. புதியதாக ரூபாய் நோட்டுக்கள் வெளியான போது அவற்றில் வேறுபாடுகள் உள்பட பல்வேறு குளறுபடிகள் நடந்தது. தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் வங்கி ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கிரேட்டர் நொய்டா பகுதியில் எச்டிஎப்சி வங்கியில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் சேதம் அடைந்த நிலையிலும், மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறாமலும் காணப்பட்டது. ஏடிஎம்.ல் பணம் எடுத்தவர்களுக்கு காந்தியின் புகைப்படம் இடம்பெறாமல் 500 ரூபாய் நோட்டுக்கள் வந்தது பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் ஏடிஎம் பயன்படுத்தியவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் நாங்கள் புகாரை தெரிவித்து உள்ளோம், அவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரிப்பதாக உறுதியளித்து உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தாங்கூரில் இம்மாதம் ரூ. 11 ஆயிரம் கள்ள நோட்டுக்கள் வங்கி ஏடிஎம்.ல் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.