உ.பி. பிச்சைக்காரர்கள் பணமதிப்பிழப்பு அறிவிப்பு!: ஒரு ரூபாய்க்கு தடையாம்!
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி, இனி ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்
கடந்த 2016-ஆம் வருடம் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடிரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதனால் மக்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. தாங்கள் வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி, ஏ.டி.ம். தபால் நிலைய வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி முதியவர்கள் பலியானதும் நடந்தது. மாரடைப்பால் உயிரிழந்தனர். இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. தவிர திரும்பப் பெறப்பட்ட ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக ரூ. 2000 அறிமுகப்படுத்தப்பட்டதால் சில்லறை தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இந்த நிலியல் உத்தரப் பிரதேச மாநில பிச்சைக்காரர்களும் மத்திய அரசை போல் ரூ. 1 நாணயத்தை செல்லாது என்று அறிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்ட பிச்சைக்காரர்கள்தான் இப்படி அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது போல் நாங்களும் 50 பைசா அளவிலான ரூ 1 நாணயத்தை செல்லாது என்று அறிவித்துள்ளோம். இனி இந்த நாணங்களை வாங்க மாட்டோம்.
இந்த நாணயம் சிறிய அளவில் இருப்பதால் கடைக்காரர்கள், ரிக்சா இழுக்கும் தொழிலாளர்கள் அந்த ரூ. 1 நாணயத்தை வாங்குவதை இல்லை. ஆகவேதான் நாங்கள் மட்டும் ஏன் வாங்க வேண்டும் என்று தடை செய்துவிட்டோம்” என்கிறார்கள் கெத்தாக.
என்னத்தை சொல்ல?