லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் கிளப்புகளில் மதுவடிக்கும் சாதனத்தைப் (micro brewery) பொறுத்திக்கொண்டு, அதன்மூலம் சுயதயாரிப்பு பியரை (draught beer) விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது உத்திரப்பிரதேச மாநில அமைச்சரவை.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது, “உத்திரப்பிரதேசத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இதற்கான அனுமதி இருக்கவில்லை. தற்போது அதற்கேற்ற வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஹரியானா, டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த மதுவடிக்கும் சாதனத்தை வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனத்தின் மூலமாக ஒரு நாளைக்கு 600 லிட்டர் பியரும், ஒரு ஆண்டிற்கு 2.1 லட்சம் லிட்டர் பியரும் பெறலாம். இந்த சாதனத்தைப் பொறுத்திக் கொள்வதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 ஆயிரமும், இதற்கான உரிமம் பெறுவதற்கான கட்டணமாக ரூ.2 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.