உ.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அகிலேஷ் முடிவு: தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து நாளை அறிவிப்பு

--

லக்னோ:

தந்தையுடன் மோதல் முற்றுவதால் முதல்வர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை காலை மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு அகிலேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

உபி சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷூக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. உபி சட்டமன்ற தேர்தலுக்கு முலாயம் சிங் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்கு எதிராக போட்டி வேட்பாளர் பட்டியை அகிலேஷ் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து உபி அரசியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது

இதனால் ஆத்திரமடைந்த முலாயம் சிங், அகிலேஷ் யாதவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தல் முதல்வர் பதவியை அகிலேஷ் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலில் தனித்து போட்டியிட அவர் முடிவு செய்திருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உபி அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் சமாஜ்வாடி கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


முலாயம் சிங்குக்கு ஆதரவாக அவரது தம்பி சிவ்பால் என்பவரும், அகிலேஷூக்கு ஆதரவாக அவரது மாமா ராம் கோபால் யாதவும் செயல்படுகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தனது இல்லத்தில் நடைபெறும் என அகிலேஷ் அறிவித்துள்ளார். ஆனால், கட்சி தலைவருக்கு தான் கூட்டம் நடத்த அதிகாரம் உள்ளது என சிவ்பால் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் தொடர்பாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. மாநிலத்தில் தற்போதுள்ள சூழ்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என உபி கவர்னர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.
எனினும் மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக தனது ஆதரவாளர்கள் பட்டியலை முலாயமிடம் அகிலேஷ் அளித்திருந்தார். அதில் இருப்பவர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அதில் யாருடைய பெயரும் இல்லாததால் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதன் காரணமாக கட்சி தலைவர் என்ற முறையில் அவருக்கு முலாயம் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கடையில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து முலாயம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.