உத்தரப்பிரதேசம் : ஒருவருக்கொருவர் ஊழல் புகார் சொல்லும் முதல்வரும் துணை முதல்வரும்

க்னோ

த்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் ஒருவர் மேல் மற்றவர் ஊழல் புகார் கூறி வருகின்றனர்.

 

உத்திரப் பிரதேசத்தின் பாஜக அரசில் யோகி ஆதித்யநாத் முதல்வராகவும் கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர்.   இவர்கள் இருவருக்கும் இடையில் தற்போது மோதல் உருவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.   துணை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் சாலை பராமரிப்புத் துறை மீது முதல்வரும் முதல்வரின் லக்னோ மேம்பாட்டு அமைப்பின் மீது துணை முதல்வரும் ஊழல் புகார் எழுப்பி உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் பொதுப்பணித்துறை மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் குறித்த ஒரு ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்தினார்.  இந்த கூட்டத்தில் துணை முதல்வரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான கேசவ் பிரசாத் மவுரியா அதில் கலந்துக் கொள்ளவில்லை. அத்துடன் அவர் இதற்கான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

இந்த கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உல்ளதாக யோகி கோபமாக தெரிவித்துள்ளார்.அத்துடன் நிதி ஒதுக்கீடு செய்தும் பல பணிகள் தொடங்கப்படாததையும் சுட்டிக்காட்டிய அவர் அதற்கான அதிகாரிகள் மீது வழக்கு தொடருமாறு மாநிலத் தலைமைச் செயலரிடம் கூறி உள்ளார்.  அது மட்டுமின்றி கடந்த இரு வருடங்களாக பொதுப் பணித்துறை, ஊரக மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை அளித்த ஒப்பந்தங்களைத் தணிக்கை செய்ய உத்தரவிட்டார்

இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அதாவது இந்த மாதம் 13 ஆம் தேதி முதல்வர் யோகியின் கட்டுப்பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு அமைப்பில் ஊழல் நடந்துள்ளதாக மவுரியா ஒரு கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.   அந்த கடிதத்தில் வணிக நிலங்கள் ஒதுக்குவதில் ஊழல், அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதில் முறைகேடு, திட்டம் குறித்த அறிக்கைகளில் போர்ஜரி, மற்றும் பைல்கள் காணாமல் போனது எனப் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பி உள்ளார்.

உள்ளூர் காவல் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.  அத்துடன் அவர்களில் ஒருவரான சுல்தான்பூர் ரோட்டில் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் பணத்துடன் தலைமறைவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அனுபவம் உள்ள ஒப்பந்ததாரர்களை பின் தள்ளி விட்டு நிறுவனம் தொடங்கி ஒன்பது நாட்கள் ஆன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக் கொண்டு ஒருவர் மீது மற்றவர் கல் எறிவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.