“ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் சூளுரை..

 

ஐதராபாத் :

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சிக்கு வரும் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள டி.ஆர்.எஸ். கட்சி வசம் உள்ள இந்த மாநகராட்சியை கைப்பற்ற பா.ஜ.க. பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த கட்சியின் பெரும் தலைவர்கள் ஐதராபாத்தில் முற்றுகையிட்டு ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

உத்தரபிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத் ஐதராபாத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் “ஐதராபாத் நகரின் பெயரை மாற்ற முடியாதா ? என என்னிடம் பலரும் கேட்கிறார்கள். ஏன் முடியாது ? உத்தரபிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், பைசாபாத் பெயரை அயோத்தி என்று மாற்றினோம்.

அலகாபாத் பெயரை, பிரயக்ராஜ் என மாற்றி உள்ளோம். தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என மாற்றுவோம்” என யோகி ஆதித்யா நாத் தெரிவித்தார்.

“ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், அங்கு ஐதராபாத் மக்களும், தெலுங்கானா மக்களும் நிலம் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது” என ஆதித்ய நாத் மேலும் குறிப்பிட்டார்.

– பா. பாரதி