முதல்வர் யோகியிடம் ஆசிபெற்ற போலீஸ் அதிகாரி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

கோரக்பூர்:

உ.பி. மாநிலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மாநில முதல்வர் யோகிஆதித்யநாத் முன் மண்டியிட்டு ஆசி பெறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஆடி மாதம் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு. அன்றைய தினம் தாங்கள் குருவாக மதிப்பவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம். பொதுவாக இந்த கல்விக்கூடங்களில் குரு பூர்ணிமாவையொட்டி, மாணவ மாணவிகள் தங்கள் ஆசிரியர், ஆசிரியை களுக்கு மரியாதை செய்வது வழக்கம்.

இந்த நிலையில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு உ.பி. மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரி பிரவீன் குமார்  என்பவர், தான் குருவாக நினைத்துள்ள முதல்வர் யோகியிடம் ஆசிபெற வேண்டும் என்று கோரினார்.

முதல்வர் யோகியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, யோகி ஆதித்யநாத் முன் காவலர் பிரவீன் குமார்  சீருடையிலேயே மண்டியிட்டு,  யோகியின் நெற்றியில் திலகமிட்டதுடன், அவருக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்தார். அப்போது யோகி, அநத காவல் அதிகாரிக்கு ஆசி வழங்கினார்.

இந்த புகைப்படங்களை  பிரவீன்குமாரே தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பணியில் இருக்கும் ஒரு காவலர் இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா என்பது குறித்து சர்ச்சை கிளப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே டில்லி காவல் நிலைய பெண் போலீசார் ஒருவர்,  சீருடையிலேயே பெண் துறவியிடம் ஆசிபெற்றதால்  பணியிட மாற்றம்  செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.