ராகுலை கீழே தள்ளி கைது செய்த உ.பி.போலீஸ்: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம்…

சென்னை: ஹத்ராஸ் சென்ற ராகுலை, மாநிலத்திற்கு வர விடாமல் தடுத்து, அவர் நடந்து சென்றபோது, அவரை  சாலையில் தள்ளிவிட்டு அடாவடி செய்த உ.பி. மாநில போலீசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியியினர் தமிழகம் முழுவதும்  போராட்டம் நடத்தினர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தியை அங்கு செல்ல அனுமதி மறுத்த உ.பி. போலீசார், அவர்கள் நடந்து சென்றபோது, சாலையில் தள்ளிவிட்டு, அடாவடி செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர்.

உ.பி. மாநில போலீசாரின் அடாவடி மற்றும்  கைது செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சமூக விலகளுடன் போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேச மற்றும் மத்திய அரசுகள் மற்றும் யூபி காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.

இதனிடையே ராகுல் காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.