லக்னோ:

பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் உ.பி. மாநிலத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான போஸ்கோ வழக்கில் 9 நாளில் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கி அதிரடி காட்டியுள்ள மாவட்ட நீதிமன்றம். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாஜக ஆட்சி செய்து வரும் உ.பி. மாநிலத்தில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 9 நாட்களில் வழக்கை விசாரிணை செய்து முடித்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

சம்பவத்தன்று உ.பி. மாநிலம்  அவுரையா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது வாலிபர்  ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் 1ந்தேதி அன்று பக்கத்துவீட்டைச் சேர்ந்த 4 வயது சிறுமியை அழைத்து, ஏமாற்றி அந்த சிறுமியிடம்  பாலியல் சேட்டை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தச்சிறுமி அதிர்ச்சி அடைந்து, தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் வாலிபர் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது போஸ்கோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான குற்றப்பத்திரிகை கடந்த 18ம் தேதி மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றத்தின்  கூடுதல் நீதிபதி ராஜேஸ் சவுகான், தொடர்ந்து 9 வேலை நாட்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில்,  குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

நீதிபதியின் அதிரடி தீர்ப்பு அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.