டில்லி

த்திரப்பிரதேச பாஜகவை சேர்ந்த தலித் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னை முதல்வர் யோகி ஆதித்யநாத் விரட்டி அடித்ததாக  பிரதமரிடம் புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் வன்கொடுமைத் தடை சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் தலித் மக்களால் நிகழ்த்தப்பட்டது.    தற்போது தலித் வகுப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமரிடம்  முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதியின் பாஜக உறுப்பினர் சோட்டேலால்.   இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர்.   இவர் தனது கட்சியில் உள்ளவர்கள் தன்னை தலித் என்பதால் மதிப்பதில்லை என புகார் கடிதம் ஒன்றை  பிரதமரிடம் அளித்துளார்.   அவர் தனது கடிதத்தில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.

சோட்டேலால், “பாஜக வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான என்னை கட்சியில் யாரும் மதிப்பதில்லை.    நான் அளிக்கும் எந்தப் புகாரையும் மாநிலத் தலைமை ஏற்பதில்லை.  எனது தொகுதி குறித்து எந்த கோரிக்கைகளும் கண்டு கொள்ளப் படுவதில்லை.   இது குறித்து நான் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் முறை இட்டேன்.   ஆனால் அவர் என்னை திட்டி தனது அலுவலகத்தை விட்டு விரட்டி அடித்து விட்டார்.” என தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சோட்டேலால் சென்ற வருடம் உள்ளூர் தேர்தலில் காவல்துறையினர் பற்றி தாறுமாறாக பேசிய வீடியோ ஏற்கனவே வைரலானது குறிப்பிடத்தக்கது.