பாஜகவுக்கு வாக்களித்த தனது விரலை வெட்டிக் கொண்ட தலித் இளைஞர்

புலந்த்ஷகர், உத்திரப் பிரதேசம்

வறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததற்காக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு தலித் இளைஞர் தனது விரல்களை வெட்டிக் கொண்டுள்ளார்.

மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷகர் தொகுதியில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. உத்திரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் அணியும் காங்கிரஸ் அணியும் போட்டி இடுகின்றன.

புலந்த்ஷகர் பகுதியில் உள்ள அப்துல்லாபூர் ஹுலஸ்பூர் என்னும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூர் சாந்திப்பூர் காவல்நிலைய சரகத்துக்குள் வருகிறது. இந்த சிற்றூரில் வசிக்கும் 25 வயதான தலித் இளைஞர் பவன் குமார் என்பவர் தனது சகோதரருடன் வாக்களிப்பதற்காக நேற்று அவருடைய ஊரில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார்.

இந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சார்பில் யோகேஷ் சர்மா என்பவரும் பாஜக சார்பில் போலா சிங் என்பவரும் போட்டியிடுகின்றனர். பவன் குமார் தனது வாக்கை பகுஜன் சமாஜ் கட்சிக்கு செலுத்த விரும்பி உள்ளார். ஆனால் வாக்களிக்கும் போது தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்து விட்டார். அதனால் அவர் மனம் உடைந்தார்.

பவன்குமார் தவறு செய்த தனது விரலை தானே வெட்டிக் கொண்டுள்ளார். விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை பவன்குமார் வெளியிட்டுள்ளார்.