உத்திரப் பிரதேசம் : 22 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாத மனித உடல்

பாந்தா, உ பி.

த்தரப்பிரதேச மாநிலத்தில் கல்லறையில் புதைக்கப்பட்ட ஒரு மனிதனில் உடல் 22 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருந்துள்ளது.

உத்திரப் பிரதேச பாந்தா மாவட்டத்தில் உள்ள பகேரு பகுதியின் அட்டாரா சாலையில் ஒரு இஸ்லாமியக் கல்லறை உள்ளது. இந்த பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன் தினம் கல்லறையில் கடும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட உடல் வெளியே வந்துள்ளது.

வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டிருந்த அந்த உடல் கெட்டுப் போகாமல் இருந்துள்ளது. அந்த வெள்ளைத் துணியும் புதிது போல இருந்தது/ எனவே யாரும் சமீபத்தில் புதைத்த உடலாக இருக்கலாம் எனக் கருதி அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் அந்த உடல் சுமார் 22 வருடங்களுக்கு முன்பு மரணம்  அடைந்த நசீர் அகமது என்பது தெரிய வந்தது.

அந்த உடலை அடையாளம் கண்டறிந்த அவரது உறவினர் தாம் நசீரின் இறுதிச்  சடங்கில் கலந்துக் கொண்டதையும் தெரிவித்துள்ளார். இதையொட்டி அந்த பகுதி மக்கள் இதை ஒரு அற்புதம் எனவும் நசீர் அகமது அல்லாவால் ஆசிர்வதிக்கப்பட்டவர் எனவும் புகழ்ந்துள்ளனர். உள்ளூர் இஸ்லாமிய மத குருவின் ஆலோசனைப்படி அந்த உடல் அதே பகுதியில் நேற்று மீண்டும் புதைக்கப்பட்டது.