லக்னோ,
டுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியாவே ஆவலோடு எதிர்பார்க்கும் உ.பி. தேர்தலையொட்டி, காங்கிரஸ், பாரதியஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற அனைத்து கட்சிகளும் ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகிலஇந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி, கிஷான் யாத்ரா என்ற பெயரில் ஏற்கனவே  உ.பி. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரதயாத்திரைகளையும் நடத்தி வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இம்மாநிலத்தில் அதிக இடங்களில் வென்ற பாஜ, இந்தமுறை ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரசும் ஆட்சியை பிடிக்க வேண்டு மென தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று போராடி வருகிறது.
சமாஜ்வாடி தலைவர் முலாயமும், அவரது மகன் முதல்வர் அகிலேஷும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜும் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், எதிர்பாராத திருப்பமாக காங்கிரசுடன் கைகோர்க்க சமாஜ்வாடி திட்டமிட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக சமாஜ்வாடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. கூட்டணி குறித்து இருகட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘சமாஜ்வாடி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பட்சத்தில் 300 சீட்களுக்கு மேல் கிடைக்கும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது’’ என்றார்.