லக்னோ:
உபி.யில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதியஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிரபல பத்திரிகையான இந்தியா டுடே, 2017 ல் நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது.
அதில்,  அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு பாரதியஜனதா கட்சிக்கு உள்ளதாக  கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது.
2014 ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிபெரும்பான்மை பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் பிரதமராக மோடி தலைமை ஏற்றபிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் அக்கட்சி அபார வளர்ச்சி பெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. .
உ.பி., சட்டசபை தொடர்பாக, இந்தியா டுடே – ஆக்சிஸ் நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் பரபரப்புமுடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

உத்தர பிரதேச மாநிலத்தி்ல் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி, அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 202 இடங்கள் தேவை.
பாரதிய ஜனதா கட்சி : 170 – 183 இடங்களை பெற்று முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது..
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி:  115 – 124 இடங்கள் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும்.
தற்போது, ஆளுங்கட்சியாக உள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான
சமாஜ்வாடி கட்சி:  94 – 103 இடங்களை பிடித்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி :  8 – 12 இடங்களையும், பிற கட்சிகள் 2 – 6 இடங்களை பிடிக்கும்.
இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்த கருத்து கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உ.பி.யில் ஆட்சியை பிடிக்க காங். பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது. ராகுல்காந்தி தனது கிஷான் யாத்திரை மூலம் மாநிலம் முழுவதும் பம்பரமாக சுற்றி வருகிறார். பொதுமக்களிடையே கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகிறார்.
உ.பி.யில்  ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் சமீக காலமாக ஏற்பட்டுள்ள குடும்ப சண்டை காரணமாக கட்சி கலகலத்து போய் உள்ளது.  கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கலக்கமடைந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இது போன்ற நிகழ்வுகள் வெற்றி வாய்ப்பபை பாதிக்கும் என கருதுகின்றனர்.
இதனை பா.ஜ. , பகுஜன் சமாஜ் ,காங்., கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றன.