டெல்லி:
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக ம.பி. பிந்த் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள அடேர் சட்டப் பேரவைத் தொகுதிக்கும், உமாரியா மாவட்டம், பந்தவ்கர் சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்வதற்கான கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த வகை கருவிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கண்ணாடி பெட்டியில் வாக்களித்ததற்கான ஒப்புகைச் சீட்டு கட்சிச் சின்னத்துடன் 7 வினாடிகளுக்குள் வாக்காளர்களு க்குத் தெரியும். பின்னர், அந்தச் சீட்டு உள்சென்று விழுந்துவிடும். வாக்காளர்கள் அந்தச் சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

பிந்த் மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள அந்த வகை கருவிகள் சரியாக இயங்குகிறதா? என்று பிந்த் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது, எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் பாஜக சின்னத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டு அந்தக் கருவியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து பிந்த் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் உள்பட 19 மூத்த அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது. இதை தெரிந்துகொண்ட சில செய்தியாளர்களிடம் இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவரக் கூடாது என்று தேர்தல் அதிகாரி சலீனா சிங் எச்சரித்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

‘‘இதற்கிடையே, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்கான கருவியில் ஒத்திகை நடைபெற்ற போது முதலில் பாஜக சின்னமும், பின்னர் காங்கிரஸ் சின்னத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டும் வந்தது’’ என்று சலீனா சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸூக்கும் உரிய பதிலளித்துவிட்டதாக அவர் கூறினார். செய்தியாளர்களை எச்சரித்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் சயீத்தை சந்தித்த பின் அவர் கூறுகையில்,‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக கலெக்டரும், எஸ்.பி.யும் ஏன் மாற்றப்பட்டனர். இவர்கள் அந்த இயந்திர சாப்ட்வேரில் மாற்றம் செய்தார்களா?.

இயந்திரத்தில் ஏற்படும் கோளாறு எப்போதும் ஏன் பாஜ.வுக்கு சாதகமாகவே அமைகிறது. காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு சாதகமாக இருப்பது கிடையாது. மத்திய பிரதேசத்தில் நடந்தது முதல் சம்பவம் அல்ல. இயந்திர முறைகேடு அசாமிலும் இது போல் நடந்துள்ளது’’ என்றார்.

இவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மோகன் பிரகாஷ், திக் விஜய் சிங் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர். வாக்குப்பதிவு இயந்திர முறையை அகற்ற வேண்டும். சம்மந்தப்பட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தினர். வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பகத்தன்மை இல்லை என்று திக்விஜய் சிங் தெரிவித்தார்.