லக்னோ:

கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. அன்று முதல் தற்போது வரை நடந்த ஆயிரத்து 142 என்கவுண்ட்டர்களில் 37 பேர் கொல்லப்பட் டுள்ளனர். 2 ஆயிரத்து 744 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து உ.பி டிஜிபி ஓ.பி.சிங் கூறுகையில், ‘‘ குற்றவாளிகள் மீதான எங்களது பார்வை தெளிவாக உளளது. சரணடைய வேண்டும் அல்லது கைது செய்யப்படுவார்கள். எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டால் நாங்களும் தற்காப்புக்கு சுடுவோம். இது தான் போலீசாரின் நடவடிக்கையாக இருக்கும். ’’ என்றார். என்கவுண்ட்டர்களில் இது வரை 4 போலீசார் வீரமரணம் அடைந்துள்ளனர். 247 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜ்யசபாவில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் இப்பிரச்னையை கிளப்பினர். அப்போது அவர்கள பேசுகையில், ‘‘நொய்டாவில் அப்பாவி மனிதர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. என்கவுண்ட்டர் கலாச்சாரம் உ.பி.யின் வளர்ச்சியை பாதித்துள்ளது’’ என்றார்.

இது குறித்து டிஜிபி கூறுகையில், ‘‘இது என்கவுண்ட்டர் கிடையாது. இது ஒரு வித்தியாசமான வழக்கு. காயமடைந்த அந்த நபர் தேடப்படும் குற்றவாளியல்ல. இந்த வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளிகள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஒரு சில வழக்குகளில் தான் குற்றவாளிகள் இற ந்துள்ளனர். பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்ட்டர் என்பது சரியான தீர்வு கிடையாது. போலீசாரின் கடுமையான நடவடிக்கையாக தான் இது இருக்கும்’’ என்றார்.

உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் சந்திர மோகன் கூறுகையில், ‘‘ஜாதி அடிப்படையில் காவல் நிலையங்கள் ஏலம் விடப்பட்டிருந்தது. அவ்வாறு செயல்பட்டவர்கள் இனி அமைதியாக இருக்க முடியாது. சட்டத்தின் ஆட்சி உ.பி.யில் இருக்கும். போலீசாரின் நடவடிக்கை பெருமை அளிக்கும் வகையில் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்பாட்டால் மக்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். இதை சமாஜ்வாடி கட்சி அரசியலாக்குகிறது’’ என்றார்.

இது குறித்து கூடுதல் டிஜிபி ஆனந்த் குமார் கூறுகையில், ‘‘கூலிப் படை, ஆள் கடத்தல், பகல் நேர கொள்கைள் தற்போது உ.பி.யில் குறைந்துள்ளது. சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. குற்றச் செயல்களை மக்கள் மாற்று வழியாக கையாளுகின்றனர். போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால் ஓடிவிடுவார்கள் என்ற குற்றவாளிகளின் எண்ணம் தற்போது தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது.

அதனால் இது புது மாதிரியான முயற்சி தான். என்கவுண்ட்டர் என்பது மாநிலத்தின் கொள்கை என்று முதல்வரோ அல்லது காவல் துறையே அறிவிக்கவில்லை. என்கவுண்ட்டர்கள் திட்டமிடப்படுவது கிடையாது. குற்றவாளிகள் சுடும் போது எதிர் தாக்குதல் தான் நடத்தப்படுகிறது. இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் கேள்விக்கு மாநில அரசு பதில் அளித்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

அடுத்த மாதம் முதலாவது முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் உ.பி.யில் நடக்கிறது. அரசியல் ரீதியாகவும், தனியார் முதலீட்டை ஈர்க்க சட்டம் ஒழுங்கு பிரச்னை மிகப்பெரிய சவாலாக உள்ளது.