ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி மறுப்பது மலிவான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் விமர்சித்து உள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப 1000 பேருந்துகளை இயக்க காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி முடிவெடுத்தார். அதற்கேற்ப 1000 பேருந்துகளின் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களை உத்தரப்பிரதேச அரசு கேட்டிருந்தது. அதன் விவரங்களை சரி பார்க்க வேண்டும் என்றும் கூறியது.
ஆனால் அந்த எண்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் எண்கள் இருந்ததாக உத்தரப்பிரதேச அரசு கடுமையாக விமர்சித்தது.
உ.பி. அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக சாடியது. மாநில எல்லையில் பேருந்துகளை போலீஸார் மடக்கி நிறுத்தி வைத்ததாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. அக்கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் கூறியதாவது: காங்கிரஸ் மக்களுக்கு உணவு மற்றும் பேருந்துகளை ஏற்பாடு செய்தால், ஒவ்வொரு அரசாங்கமும் அதை வரவேற்க வேண்டும்.
ஆனால் எல்லைகளில் அனுமதி வழங்காதது, தலைவர்களைக் கைது செய்தல் என மலிவான அரசியல் செய்வது நியாயமா? உ.பி. அரசு பேருந்துகளை அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமானது. புலம்பெயர்ந்தோர் பிரச்சினையில் உ.பி. அரசு மலிவான அரசியல் செய்து வருகிறது என்றார்.