புலம் பெயர் தொழிலாளர் : பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை ஏற்கும்  உத்தரப்பிரதேச அரசு

க்னோ

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் பணி புரியும் மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்ப இயலாத நிலையில் உள்ளனர்.   இதையொட்டி தற்போது அவர்களை அந்தந்த மாநிலங்களின் அனுமதிக்கிணங்க சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பலாம்  என மத்திய அரசு அனுமதி அளித்தது.  இவர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு ரயில் வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்த ரயில்களின் கட்டணத்தைப் புலம்பெயர் தொழிலாளர்கள் செலுத்த வேண்டி இருந்ததாக வெளியான தகவலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு ரயில் கட்டணத்தைக் காங்கிரஸ் கட்சி ஏற்கும் என அறிவித்தார்.  அதன் பிறகு  தொழிலாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் மாநில அரசுகள்  செலுத்தும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநில அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல வசதியாக 1000  பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் அதற்கு மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு உபி மாநில கூடுதல் உள்துறை தலைமைச் செயலர் அவனாஷ் அவஸ்தி, “பிரியங்கா காந்தி அறிவித்த 1000 பேருந்துகளை ஏற்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.  எனவே இந்த ஆயிரம் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் துணை ஓட்டுநர்களின் பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கவும்.  அவர்களைக் கொண்டு வெளி மாநிலங்களில் உள்ள உத்தரப்பிரதேச தொழிலாளர்களைத் திரும்ப அழைத்து வர எங்களுக்கு உதவியாக இருக்கும்” எனப் பதில் அளித்துள்ளார்.