லக்னோ: திருமணத்தின் பொருட்டு மதம் மாற்றம் செய்தால், அதற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது உத்திரப்பிரதேசத்தின் பா.ஜ. அரசு.

இதுதொடர்பாக, அரசு வட்டாரத்தில் கூறப்படுவதாவது; திருமணம் செய்வதற்காக மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது.

இதனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை குற்றமாக்கும் வகையில், அவசரச் சட்டம் அமல்படுத்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, மதமாற்றம் செய்தால், 1 முதல் 5 ஆண்டுகள் சிறை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இளம் சிறுமியர், எஸ்சி – எஸ்டி மற்றும் பழங்குடியின பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், 3 முதல் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால், அதில் ஈடுபடும் அமைப்புக்கு, 3 முதல் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதேநேரத்தில், திருமணத்துக்குப் பிறகு மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், மாவட்ட ஆட்சியரிடம், இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.