மாசை தடுக்க டில்லி நகர் அருகே கட்டுமான பணிகளுக்கு தடை

--

நொய்டா

டில்லி நகர் மாசடைவதை தடுக்க நகரின் அருகே அனைத்து கட்டுமானப் பணிகளுக்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது.

டில்லி நகர் மாசுபடுவது கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணி வீரர்கள் முகமூடியுடன் விளையாடியது கடும் பரபரப்பை உண்டாக்கியது. பழைய டீசல் வாகனங்கள் நகரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நொய்டாவுக்கு வந்த உத்திரப் பிரதேச தலைமை செயலர் அனூப் சந்திர பாண்டே, “டில்லி நகர் மாசுபடுவதை தடுக்க நகரை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கட்டுமானப் பணிகளை நடத்த தடை விதிக்கபட்டுள்ளது. இந்த தடை தோண்டுதல், கட்டுமானப் பணிகள், நிறைவுக் கட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் செல்லுபடியாகும்.

பணிகளின் போது கட்டுமானப் பொருட்கள் உபயோகப் படுத்தவில்லை என்றாலும் இந்த தடை நீடிக்கும். இந்த தடை இன்று முதல் 10 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும்.

அது போல நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை உபயோகப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் ஒரு வாரம் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறாமல் இருக்க அனைத்து அதிகாரிகளுக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் நகல் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கல் உடைக்கும் குவாரிகளும் இந்த கால கட்டத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையில் இருந்து எரிவாயுவை உபயோகிக்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.