வாரணாசி : தலித்துகள் புல் தின்னும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு நோட்டிஸ்

வாரணாசி

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தலித்துகள் புல்லைத் தின்று உயிர் வாழும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் செய்தித் தாளான ஜன்சந்தேஷ் என்னும் நாளிதழ் 16 பக்கங்களுடன் ஐந்து நகரங்களில் அச்சடிக்கப்பட்டு வெளி வருகின்றது.  இந்த நாளிதழில் பத்திரிகையாளரான விஜய் வினீத் என்பவர் தனது சக பத்திரிகையாளரான மனிஷ் மிஸ்ராவுடன் இணைந்து பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள கோரிப்பூர் கிராமம் குறித்த செய்தியை வெளியிட்டார்.

அந்த செய்தியில் அவர் அந்த ஊரைச் சேர்ந்த தலித் மக்கள் புல்லைத் தின்று உயிர் வாழ்வதாகத் தெரிவித்திருந்தார்.   அத்துடன் அவர் தலித் குழந்தைகள் புல்லைத் தின்னும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.  இது அனைத்து ஊடகங்களிலும் பரவி பலரும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர்.   இந்த செய்தியை வெளியிட்ட விஜய் வினீத் துக்கு வாட்ஸ்அப் மூலம் மாவட்ட நீதிபதி கௌசல் ராஜ் சர்மா நோட்டிஸ் ஒன்றை அனுப்பினார்.

விஜய் வினீத்

அதன்பிறகு காவல்துறையினர் நேரில் அவர் வீட்டுக்கு வந்து நோட்டிஸை அளித்துள்ளனர்.   அந்த நோட்டிஸில் தற்போது நிலவி வரும் முக்கிய சூழலில் இது போல் தவறான தகவலைப் பரப்பியது குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு உத்தரவு இடப்பட்டிருந்தது.

மேலும் அந்த நோட்டிஸில் ஒரு விசாரணைக் குழு இங்கு ஆக்ரி தால் என அழைக்கப்படும் அந்த புல்லின் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ள்து.  கோதுமை நிலங்களில் வளரும் இவ்வகை புற்கள் மனிதர்கள் உண்ணத் தகுதியற்றவை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு எனவும் அந்த நோட்டிஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் மாவட்ட நீதிபதி அந்த புற்களைத் தாமே சாப்பிடுவதுபோல் ஒரு புகைப்படத்தையும் அந்த நோட்டிஸுடன் அனுப்பி இருந்தார்.

இது குறித்து வினோத், ‘நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிபுணர்களிடம் கேட்டதில் இந்த புற்கள் மனிதர் சாப்பிடக்கூடாது எனவும் கால்நடைகளும் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.   எனவே மாவட்ட நீதிபதி தவறான தகவலை அளித்து இந்த புற்கள் மனிதர்கள் சாப்பிடத் தகுதியானது எனச் சான்றிதழ் அளித்துள்ளார்.

இந்த புற்களைக் குழந்தைகள் சாப்பிட்டுள்ளனர்.  இந்த தவறான தகவல் குழந்தைகள் உரிமைக்கு எதிரானது.   இதனால் குழந்தைகள் மேலும் இந்த புற்களைச் சாப்பிடக் கூடும்.  ஆகையால் நான் இது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்துக்குப் புகார் அளிக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.