லக்னோ: எதிர்வரும் குடியரசு தினத்தன்று, விவசாயிகள் திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக, டிராக்டர்களுக்கு டீசல் நிரப்ப வேண்டாம் என்று உத்திரப்பிரதேசத்தின் பாஜக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மோடி அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் வீரம் செறிந்த மாபெரும் போராட்டத்தை நடத்திவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணியை நடத்தி, அரசுக்கு தங்களின் எதிர்ப்பை இன்னும் வலுவாக பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்திரப் பிரதேசத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில், டிராக்டர்களுக்கு டீசல் நிரப்பக்கூடாது என்று அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைக் கேள்விப்பட்டவுடன் கொதித்தெழுந்த விவசாய போராட்டக்குழு தலைவர்களுள் ஒருவரான ராகேஷ் டிகெய்ட், விவசாயிகள் எங்கெங்கு இருந்து போராடுகிறார்களோ, அந்தந்த இடத்தில் சாலைகள் மற்றும் போக்குவரத்துப் பாதைகளை மறிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேசமயம், இந்த டிராக்டர் ஊர்வலத்திற்கு, டெல்லி காவல்துறை இன்னும் எந்தவித எழுத்துப்பூர்வ அனுமதியையும் தரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.