லக்னோ:

உ.பி. மாநிலம் பிஆர்டி அரசு மருத்துவமனையில் நடந்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமா? என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

உ.பி. மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையின் தலைவர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயானது பக்கத்து அறைகளுக்கும் பரவியது. கரும்புகையுடன் தீவிபத்து ஏற்பட்டாலும், அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறையினரால் அங்கு ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்து நடந்தபோது அங்கிருந்த ஒருவர் மருத்துவமனையின் முக்கிய கோப்புகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் குழந்தைகள் உயிரிழப்பு குறித்த ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானதாக தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலும், விபத்து நடந்த அறையில் இருந்த தீயணைப்பான் சிலிண்டர்கள் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் சந்தேகத்தை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த மருத்துவமனையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைபாட்டினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. அது குறித்த விசாரணை நடந்து வரும் சமயத்தில் இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.