லக்னோ:

உ.பி. பாஜக அரசின் மெத்தன போக்கால், அங்கு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள்கூட நிறைவேற்றப்படாத சூழல் நிலவி வருகிறது.

மாநிலத்தில் பாஜக ஆட்சி  பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு என மாநிலத்தின் நிர்வாகம் தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த தனது மனைவின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்சு தர மறுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இறந்த தனது மனைவியின் உடலை, அவரது கணவர் தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் படூன் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நேற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். அவரது  சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல பெண்ணின் கணவர்  மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்ட நிலையில், மருத்துவமனையில் 2 அமரர் ஊர்திகள் இருந்தும், அதை கொடுக்க மருத்துவமனை நிர்வாகம்  மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தோளிலேயே சடலத்தை சுமந்து சென்ற கணவர் வழியில் சென்ற டெம்போ ஓட்டுனர்களிடம் தன்னை வீட்டில் இறக்கிவிடும் படி கெஞ்சியது நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உ.பி. பாஜக அரசின் மெத்தனம் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையில் மருத்துவமனையில் இரண்டு அமரர் ஊர்திகள் உள்ளது எனவும், அதை யார் கேட்டாலும் நாங்கள் கொடுப்போம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் மருத்துவமனை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.