க்னோ

புதுச்சேரி மாநிலத்தைப் போல் உத்திரப் பிரதேசத்திலும் ஆளுநர் மற்றும் அரசுக்கு இடையே அதிகாரப் போர் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கு இடையே கடும் அதிகாரப் போர் நிலவி வருகிறது. அரசின் ஒவ்வொரு விவகாரங்களிலும் கிரண் பேடி தலையிடுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. தன்னுடைய உத்தரவைக் கேளாமலே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக ஆளுநர் கிரண் பேடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை வந்து தற்போது  உயர்நீதிமன்றம் அரசுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசில் முதல்வராக  யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். யோகியும் மோடியைப் போல் பல அதிரடி முடிவு எடுப்பவர் எனக் கூறப்பட்டாலும் மோடி அவரது இத்தகைய முடிவுகளை விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக யோகி ஆதித்யநாத் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்பதை மோடி சிறிதும் விரும்பவில்லை என விஷய மறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி ஆனந்திபென் ஆளுநராகப் பதவி ஏற்றார். குஜராத் முன்னாள் முதல்வரான ஆனந்திபென் பிரதமர் மோடி குஜராத்  முதல்வராக இருந்த போது அவர் அமைச்சரவையில் பணியாற்றியவர் ஆவார். எனவே அவருக்கு மோடியின் எண்ணங்கள் குறித்துத் தெளிவாக தெரியும் என சொல்லப்படுகிறது. யோகியின் செயல்பாடுகளும் ஆனந்திபென் செயல்பாடுகளும் வேறு வேறாக உள்ளதால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச ஆளுநர் பதவி வகித்து வந்த ஆனந்திபென் உ பி ஆளுநராகி ஒரு  மாதம் ஆகும்சமபய்த்திலேயே முதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். லக்னோ மாவட்ட அரசு அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய ஆளுநர் மத்திய அரசு நிதி உதவியில் நடக்கும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விசாரித்துள்ளார். அத்துடன் ஆனந்திபென் மாநிலம் முழுவதும் பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் நலத்திட்டப் பணிகளை நேரில் பார்வையிடுவார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இந்த மாத இறுதியில் ஆளுநர் அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து அவர்கள் பணி குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக வந்த தகவல்  அமைச்சர்களின் கோபத்தைத் தூண்டியது. ஆனால் ஆளுநர் தரப்பில் அவர் மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் திட்டங்களை மட்டுமே மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் அளித்ததன் பேரில் சற்று அமைதி உண்டானது. அதே நேரத்தில் இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்த உதவித் தொகை குறித்தும் அதில் எவ்வளவு பயன்படுத்த உள்ளது என்பது குறித்தும் ஆளுநர் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இவை குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவல் இல்லை எனினும் அமைச்சர்கள் இதனால் கலக்கம் அடைந்துள்ளனர். ஆளுநர் தலையீடு குறித்து யோகி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று ஆனந்தி பென் தனது பாதுகாப்பு ஊழியர்களை திடீர் எனக் குறைத்துக் கொண்டார். இது குறித்து மாநில அரசுக்கு எவ்வித முன் தகவலும் அவர் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.