டெல்லி:

மாற்றுத் திறனாளிகளின் இயலாமையை சுட்டிக்காட்டி பேசுவோருக்கு சிறைத் தண்டனை வழங்கும் இயலாமைச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்த மறுநாளே முதல் ஆளாக உபி பாஜ அரசின் கதர் கிராம தொழில் மற்றும் குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் சத்யதேவ் பச்சாவுரி சிக்கியுள்ளார்.

இவர் கடந்த 19ந் தேதி லக்னோவில் உள்ள அவரது துறை சார்ந்த அலுவலகத்திற்கு அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊழியர்கள் பலர் அலுவலகத்தில் இல்லை. அவர்களின் பதவி, அவர்கள் பணிக்கு வரும் நேரம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பிரிவு 4 ஊழியர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டார். அவர் துப்புரவு தொழிலாளி. அதோடு மாற்றுத் திறனாளியும் கூட. அவரிடம் நீ என்ன வேலை செய்கிறாய், ஒப்பந்த தொழிலாளியா என்று ஒருமையில் கேள்விகளை கேட்டார். அவர், தான் துப்புரவு தொழிலாளி என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த ஊழியரை தலையில் இருந்து கால் வரை ஏற இறங்க பார்த்த அமைச்சர், அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரியை பார்த்தார். இயலாதவர்களை எல்லாம் ஒப்பந்த தொழிலாளியாக வைத்துள்ளீர்கள். அவர் என்ன வேலை பார்ப்பார்? என்று கேட்டார். அமைச்சரின் இந்த பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர். இதனால் அந்த ஊழியர் மனதளவில் பாதிக்கப்பட்டார்.

இது குறித்த செய்திகள் டிவி.க்களில் வெளிவந்தது. இதையறிந்த டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் சதேந்திர சிங் என்பவர் இது குறித்து லக்னோவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தில் புகார் செய்துள்ளார். புதிய சட்டப்படி அமைச்சரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.