கோண்டா, உ. பி.

பா ஜ க ஆளும் உ பி அரசின் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி ஒரு சிறுவன் பரிதாபமாக மரணம் அடைந்தான்.

உத்திரப் பிரதேச மாநில அமைச்சரவையில்  ஓம்பிரகாஷ் ராஜ்பர் அமைச்சர் பதவியில் இருக்கிறார்.  இவர் நேற்று கோண்டா பகுதியில் தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது அவருடைய பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று மோதியதால் எட்டு வயதான சிவா கோஸ்வாமி என்னும் சிறுவன் அடிபட்டு அந்த இடத்திலேயே மரணம் அடைந்தான்.  ஆனால் அமைச்சரோ மற்ற பாதுகாப்பு வாகனங்களோ நிற்காமல் சென்று விட்டன.

இந்நிகழ்வு அந்த இடத்தில் பரபரப்பை உண்டாக்கியது.  மக்கள் கூடி அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர்.   இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இது குறித்து அமைச்சர்  ராஜ்பர், “எனக்கு விபத்து நடந்தது தெரியாது.  என்னிடம் விபத்துச் செய்தியை சொல்லும் போது நான் விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் இருந்தேன்.  போலீசார் அங்கு நிலைமை கட்டுக்கடங்காமல் இருப்பதால் என்னை திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை.  மேலும் இது ஒரு துரதிருஷ்டமான சம்பவம்.  நான் விரைவில் அந்த சிறுவனின் பெற்றோரை சந்திக்க உள்ளேன்.   விபத்துக்குள்ளான வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்” எனக் கூறினார்.

உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.  சிவா கோஸ்வாமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.  மேலும் இந்த வழக்கை துரிதப்படுத்த உ பி போலீசாருக்கு ஆணை இட்டுள்ளார்.