உ.பி.: 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால், ராஜதுரோக வழக்கு! நீதிபதி அதிரடி!

பில்பிட்:

10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்படும் என நீதிபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

rbi-10rs

2010-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை தயாரித்து வெளியிட்டது மத்திய அரசு. நாடெங்கும் சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க 10 ரூபாய் நாணயங்கள் மிகவும் உபயோகமாக உள்ளது. பேப்பரில் அச்சிடப்படும் பணம் விரைவில் கசங்கி கிழிந்துவிடுவதால் நாணயத்தில் அச்சிட்டு வருகிறது மத்தியஅரசு.

இந்த நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வட மாநிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் வதந்தி பரவியது. அன்று முதல் 10 ரூபாய் நாணயத்தை வட மாநிலத்தின் பல பகுதிகளில் வாங்க மறுக்கிறார்கள்.

குறிப்பாக உத்தரபிரதேசம், டெல்லி, அரியானாவில் உள்ள கடைக்காரர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள், சாலையோர கடைக்காரகள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை.

இதுகுறித்து,  கடந்த 20-ந் தேதி ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 10 ரூபாய் நாணயம் செல்லும். அதுபற்றி யாரும் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை என்று அறிவித்தது. இருந்தாலும், உத்தரப்பிரதேசத்தில் 10 ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் வாங்க மறுக்கிறார்கள்.

இதுகுறித்து, சமீபத்தில் வாட்ஸ் அப்-பில்  தகவல் பரவியது. அதில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி கிளம்பியதால் கடந்த சில தினங்களாக 10 ரூபாய் நாணயங்கள் பரிமாற்றம் முடங்கியது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பில்பிட் மாவட்டத்தில் இந்த வதந்தி காரணமாக 10ரூபாய் நாணயத்தை யாரும் வாங்கவோ, கொடுக்கவோ முற்படுவதில்லை.

இதையடுத்து, பில்பிட் மாவட்ட மாஜிஸ்திரேட் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

“10 ரூபாய் நாணயம் தேசிய பணமாகும். அதை வாங்க மறுப்பது குற்றமாகும். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து  10 ரூபாய் நாணயம் மீதான சந்தேகம் மக்களிடையே சற்று குறைந்துள்ளதாக தெரிகிறது.