லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் மற்ற மாநிலங்களில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருந்தாலும், அதன் தொடர்பில் கைதுகளும் முதல் தகவல் அறிக்கைப் பதிவுகளும் நிகழ்ந்திருந்தாலும் உத்திரப் பிரதேசத்தில் அதன் எண்ணிக்கை குறிப்பிடும் படியாக உள்ளது.

உத்திரப் பிரதேச காவல்துறை தற்போது போராட்டம் வன்முறையாக மாறியதென்றும் எனவே அதன் விளைவாக உயிரிழப்புகளும் காயங்களும் காவல்துறை மற்றும் பொது மக்கள் என இரு சார்பிலும் ஏற்படுள்ளதையும் முடிவாக பட்டியலிட்டுள்ளது.

உத்திரப் பிரதேசக் காவல் துறையின் அறிக்கையின் படி மாநிலம் முழுவதும் இதுவரை 327 முதல் தகவல் அறிக்கைப் பதிவுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 1113 பேர்களை கைது செய்திருப்பதாகவும், 5558 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளது.

அத்துடன், 19 பேர்கள் இறந்திருப்பதாகவும், 288 காவல்துறையினர் காயமடைந்திருப்பதாகவும் அவர்களில் 61 பேருக்கு துப்பாக்கிக் குண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் கொண்டிருப்பதாகவும்  அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிக்கை குறித்து பொதுமக்கள் எதிரும் புதிருமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.