குடியுரிமை சட்ட எதிர்ப்பு – உத்திரப்பிரதேசத்தில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 263 காவலர்கள் வரை காயமடைந்துள்ளதாகவும், 700 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசத்தின் மீரட், வாரணாசி. பிரோசாபாத், கான்பூர், பரூக்காபாத், காஸியாபாத், முசாபர் நகர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தப் போராட்டங்களை காவல்துறையினர் மிகவும் மோசமாக கையாள்வதால், அவை வன்முறையாக மாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உத்திரப்பிரதேசத்தில் நிலைமை மோசமாக உள்ளது.

வன்முறைகளுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அரசால் ஏலம் விடப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

இதன்படி, தற்போது அதற்கான நடவடிக்கைகள் துவங்கவிட்டனவாம். இதன்படி, கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று அம்மாநில போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் கூறப்பட்டுள்ளது.