உ.பி. மாநில கிரைம் டைரி :   மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் என்கவுண்டர்கள்..
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ரவுடி விகாஸ் துபே, என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார், அந்த மாநில போலீஸ் கூடுதல் டிஜி.பி.யான பிரசாந்த் குமார்.
ரவுடி துபேயின் பிக்ரு கிராமத்தில் ஐம்பது, அறுபது ரவுடிகள் போலீசாரை சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகள் பாணியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், பிரசாந்த் குமார் சில தகவல்களை வெளியிட்டார்.
‘’பிக்ரு கிராமத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 பேர் ( துபே உள்பட) என்கவுண்டரில் பலியாகி விட்டனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 11 பேரை தேடி வருகிறோம்’’ என்று அவர் விளக்கம் அளித்தார்.
பா.ஜ.க. ஆட்சி நடக்கும் உ.பி. மாநிலத்தின் ‘கிரைம் டைரியை’ கூடுதல் டி.ஜி.பி. பிரசாந்த் குமார் புரட்டிப் பார்த்து விட்டு வெளியிட்ட தகவல்கள் திகில் ரகம்.
கடந்த 3 ஆண்டுகளில்  போலீசார் அந்த மாநிலத்தில் 6 ஆயிரத்து 126 என்கவுண்டர்களை நடத்தியுள்ளனர்.
இதில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை- 122. அனைவருமே கிரிமினல்கள்.
போலீஸ் தரப்பில் இழப்பு: 13.
போலீஸ் டைரியின் ஒவ்வொரு பக்கத்திலும் ரத்தக்கறைகளின் அடர்த்தி மிகுதியாக இருப்பது குறித்து அந்த செய்தியாளர் கவலை தெரிவித்த போது’’ கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளது’’ என்று மெச்சிக்கொண்டு, அவர் படித்த டைரி குறிப்புகள் நமக்கு தேவையற்றது.
-பா.பாரதி.